செய்திகள்

முதல்-அமைச்சர் போட்ட தடை: தினகரன் அறிவிப்புக்கு கருத்து சொல்ல தயங்கும் அமைச்சர்கள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதையடுத்து தினகரன் அறிவிப்பு குறித்து அமைச்சர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க தயங்குவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

அ.தி.மு.க. அம்மா அணியில் ஒதுங்கி இருந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று முதல் கட்சிப் பணிகளை தொடங்கினார்.

முதல் கட்டமாக பொதுக் கூட்ட அறிவிப்புகளை வெளியிட்ட அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுக்கு பதவி வழங்கி உள்ளார்.

இதில் அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி, ஜி.செந்தமிழன், தோப்பு வெங்கடாசலம், கு.ப.கிருஷ்ணன், மாதவரம் மூர்த்தி, டி.கே.எம். சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், பழனியப்பன், கே.டி.பச்சைமால் உள்பட 18 பேர்களை நியமித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்களில் 20 பேர்களுக்கு புதிய பதவி களை வழங்கி உள்ளார். சட்டசபையில் தனக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு டி.டி.வி.தினகரன் பதவி வழங்கி இருப்பதை காண முடிகிறது.

அ.தி.மு.க. அம்மா அணியில் யாருடைய பதவியையும் பறிக்காமல் கூடுதலாக புதிய நிர்வாகிகளை அவர் அறிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கருத்து கேட்பதற்காக அமைச்சர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதில் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

டி.டி.வி.தினகரனின் அறிவிப்பால் கட்சியில் குழப்பம் வருமா? அல்லது வலுசேர்க்குமா? என்று அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்ட போது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். “ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதால் பிறகு பேசுகிறேன்” என்று கூறி விட்டார்.

கதர்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கேட்டதற்கு, “பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதை பார்த்தேன். தற்போது நான் கிராமத்தில் உள்ளேன். பிறகு பேசுகிறேன்” என்று கூறினார்.

செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேட்ட தற்கு அவரும் கருத்து கூற மறுத்து விட்டார். “நான் இப்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு சென்று கொண்டிருப்பதால் பிறகு பேசுகிறேன்” என்று முடித்துக் கொண்டார்.