சென்னை:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க.வை வழிநடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஓரம் கட்டப்பட்டதும், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்று சேர்ந்ததும் மோடியின் முயற்சியால்தான் என்று கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீர்செல்வமும் இதனை உறுதி செய்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க. தலைவர்கள், மாநில அரசின் நலன் கருதியே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று கூறி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறி இருந்தார். இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜனதாவினர் சேதப்படுத்தினர்.
இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சி தலைவர்களும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. தலைவர்களும் எச்.ராஜாவை கடுமையாக சாடியுள்ளனர்.
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சி தலைவி அம்மா இதழில் எச்.ராஜாவுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதில் இது போன்று கருத்துக்களை பதிவிடுவதை எச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததுடன் அவர் வருந்தினால் மட்டும் போதாது திருந்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக அளித்த பேட்டியிலும் எச்.ராஜாக்கு கண்டனம் தெரிவித்தனர். பெரியார் பற்றிய கருத்தை பதிவிட்டதற்காக எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது, எச்.ராஜா இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தால் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
இதன் காரணமாக அ.தி.மு.க.-பா.ஜனதா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பா.ஜனதா தலைவர்களுடன் அ.தி.மு.க. நல்ல நட்புறவுடன் இருந்து வந்தது. இந்த நிலையில் எச்.ராஜா விவகாரம் இந்த நட்பில் திடீர் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விரிசல் தற்காலிகமானது தானா? அல்லது நிரந்தரமாக பிரிவை ஏற்படுத்தி விடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். #tamilnews