செய்திகள்

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

மண்பாண்ட தொழிலாளர்களுக்கான மழைக்கால உதவித்தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

மழைக் காலங்களில் மண்பாண்டங்கள் செய்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, புரட்சித் தலைவி அம்மா 2016 சட்டமன்ற பொது தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் “மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 4,000 ரூபாய் மழைக்கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என்ற வாக்குறுதியை அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புரட்சித் தலைவி அம்மா காட்டிய வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, மண்பாண்ட தொழிலாளர்களின் மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் 4,000 ரூபாய், இனி 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 12,236 குடும்பங்கள் பயன் பெறுவர். அரசுக்கு இதனால் ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 22 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.


சட்டக் கல்வி மேம்பாட்டிற்காக நான் கீழ்கண்ட திட்டங்களை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இப்பல்கலைக்கழகத்திற்கு குளிர்சாதன வசதி, மின்னணு மேடைகள், கணினி ஒலி வீச்சிகள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுடன் 1,040 மாணவர்கள் அமரக் கூடிய வகையில் 20 விரிவுரை அறைகள், இயக்குநர் அறை, அலுவலக அறைகள், ஆசிரியர் அறைகள், கெளரவ ஆசிரியர் அறைகள், கருத்தரங்க கூடம், மாதிரி நீதிமன்றக் கூடம், ஆவண அறைகள் மற்றும் மாணவியருக்கான பொது ஓய்வறை ஆகியவற்றை உள்ளடக்கி, தரை மற்றும் இரண்டு தளங்களை கொண்ட கூடுதல் கட்டடம் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2. மதுரை அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வருகின்ற மாணவர்களுக்கு கருத்தரங்குகள், சிறப்பு சட்ட வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விழாக்கள் மற்றும் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தற்போதைய கலையரங்கில் போதுமான இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டு, புதிய கலையரங்கம் ஒன்று முதல் தளத்திலும், நூலகக் கட்டடத்தில் உள்ள இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, புதிய நூலகக் கட்டடத்தை தரை தளத்திலும் உள்ளடக்கிய புதிய கட்டடம் 8 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.