செய்திகள்

வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதலமைச்சர் வழங்கினார்

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வணிகவரித் துறை உதவி ஆணையாளர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்களுக்கு முதலமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மாலை மலர்

சென்னை:

வணிகவரித் துறை உதவி ஆணையாளர்கள் மற்றும்  மாவட்டப் பதிவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசிற்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வணிகவரி உதவி ஆணையர் பணியானது, வணிகர்கள் செலுத்தும் மாதாந்திர கணக்குகளை சரிபார்த்தல், வரி ஏய்ப்பை தடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும். மாவட்ட பதிவாளர் பணியானது நில ஆவணங்களை பதிவு செய்தல், நிலத்திற்கான விலையை மதிப்பீடு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், பதிவு ஆவணங்களை பராமரித்தல்,  திருமணங்களை பதிவு செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.  

இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை பணியின் பணிகள் தொய்வின்றி நடைபெற, இத்துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை  தமிழ்நாடு அரசு உடனுக்குடன் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தற்போது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 21 வணிகவரித் துறை உதவி ஆணையாளர்கள் மற்றும் 8 மாவட்டப் பதிவாளர்கள் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. சந்திரமௌலி, பதிவுத் துறை தலைவர் ஜெ. குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.