மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. மேலும் பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. அந்தப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் சிலைகள் கருகின. 5-க்கும் மேற்பட்ட தூண்கள் கீழே சாய்ந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் தீவிபத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டதால் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவில் தீ விபத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மற்றும் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.