செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு - சட்ட நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்துக்கு வழங்கும் காவிரி நீர் குறைப்பட்டதால் சட்ட நிபுணர்களுடன் 19-ந்தேதி ஆலோசனை நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு சாதகமான வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆனால் விவசாயிகளில் ஒரு தரப்பினர் தண்ணீர் குறைப்பு பாதகத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைப்பது உறுதியாகும் என்ற கருத்தை அனைத்து தரப்பினரும் ஏற்றுள்ளனர். எனவே மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். திங்கட்கிழமை (19-ந்தேதி) தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எந்தந்த வகைகளில் அழுத்தம் கொடுக்கலாம் என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதற்கேற்ப தமிழக அரசு செயல்படும் என்று தெரிய வந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யலாம் என்று நடிகர் ரஜினி உள்பட சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் மறுபரிசீலனை மனுவை சுப்ரீம் கோர்ட்டு எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்துவிட்டால் அது பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்யாது என்று தெரிகிறது. அதற்கு பதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை தமிழக அரசு தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews