சென்னை:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி விக்நயா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு தகுதி பட்டியல் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல தமிழக அரசு, மருத்துவ படிப்புக்கான தகுதி பட்டியல் ஆகஸ்ட் 23-ந்தேதி வெளியிட்டது. இதில், சுமார் 24 ஆயிரம் பேர் இடம்பெற்றிருந்தனர்.
ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகுதி பட்டியலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநில மாணவர்கள் உள்ளனர். அகில இந்திய ஒதுக்கீட்டு பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
எனவே இந்த தகுதிப் பட்டியலில் பிற மாநில மாணவர்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதால், தமிழக அரசின் தகுதி பட்டியலை ரத்து செய்ய வேண்டும். புதிய தகுதிப்பட்டியல் வெளிட உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் கூறுவது தீவிரமான குற்றச்சாட்டு. அதனால், இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விரிவான பதில் மனுவை தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தாக்கல் செய்யவேண்டும். அதில் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகுதிப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.