இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்சமயம் வரை பஜாஜ் நிறுவனம் மட்டுமே க்ரூசர் மாடல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு போட்டியாக சுசுகி் நிறுவனமும் புதிய க்ரூசர் மாடல் பைக் வெளியிட இருக்கிறது. 150சிசி திறன் கொண்ட புதிய க்ரூசர் மாடல் பைக்கினை சுசுகி நிறுவனம் இன்ட்ரூடர் 150 என பெயரிட்டுள்ளது.
சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலின் முன்பக்கம் முக்கோண வடிவிலான ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ப்ரோஜெக்டர் மற்றும் எல்இடி லைட் வழங்கியுள்ளதால் நவீன தோற்றம் பெற்றுள்ளது. இதன் முன்பக்க கவுள் அதிவேகமாக செல்லும் போதும் வாகனம் ஓட்டுபவரின் முகத்தில் நேரடியாக காற்று வீசுவதை தடுக்கும் வகையில் காட்சியளக்கிறது.
இதன் இன்டிகேட்டர்களும் முன்பக்க கவுளில் வழங்கப்பட்டுள்ளதோடு குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. புதிய இன்ட்ரூடர் 150 மாடலின் மற்றொரு சிறப்பம்சமாக அதன் பெட்ரோல் டேன்க் இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக காட்சியளி்க்கும் இதன் பெட்ரோல் டேன்க் மற்ற வாகனங்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
டூயல்-டோன் சைடு பேனல்கள் மற்றும் இன்ஜின் கவுள் மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது அதிக திறன் கொண்டிருப்பதை போன்று காட்சியளிக்கிறது. பின்புற கவுளும் பெரிதாக காட்சியளிப்பதால் சுசுகி ஹயபூசா பின்புற வடிவமைப்பை போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் பின்புற பக்கெட் ஸ்டைல் இருக்கை அதிக சவுகரியத்தை வழங்கும் என்றாலும், பின்புற இருக்கை சிறியதாக இருப்பதால் நீண்ட தூர பயணங்களில் அசௌகரியமாக இருக்கலாம். இதன் பின்புறத்தில் கிராப் ரெயில், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் ஃபென்டர் வழங்கப்பட்டுள்ளது.