போராட்டம் 
செய்திகள்

கோம்பை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

கோம்பை பேரூராட்சியில் இன்று தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகில் உள்ள கோம்பை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 33 பேர் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 15-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒரு துப்புறவு பணியாளர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.

இது குறித்து அவர் மற்ற தூய்மை பணியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அனைவரும் தங்கள் பணியை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.

அவர்கள் தரக்குறைவாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அதுவரை தாங்கள் தூய்மை பணியை மேற்கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்தனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறோம். பல இடங்களில் எங்கள் பணியை ஊக்குவிக்கும் வகையில் கவுரவித்து வருகின்றனர்.

ஆனால் எங்களுக்கு அதுபோன்ற கவுரவம் வழங்காவிட்டாலும் எங்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் கோம்பை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.