செய்திகள்

மே.வங்கம்: கத்தியால் கையை கிழித்துக்கொண்ட 11-ம் வகுப்பு மாணவன் - ‘புளூ வேல்’ விளையாட்டு காரணமா?

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 11-ம் வகுப்பு மாணவன் தனது கையை கத்தியால் வெட்டியுள்ள நிகழ்வுக்கு, மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் ‘புளூ வேல்’ விளையாட்டு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 11-ம் வகுப்பு மாணவன் தனது கையை கத்தியால் வெட்டியுள்ள நிகழ்வுக்கு, மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் ‘புளூ வேல்’ விளையாட்டு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆன்லைன் விளையாட்டான ‘புளூ வேல்’ 50 நாள்கள் வரை நடைபெறும் விளையாட்டாகும். இதில் விளையாட்டில் பங்கேற்பவர்களுக்குச் சில சவால்கள் கொடுக்கப்படுகிறது. முதலில் எளிதான சவால்கள் இருக்கும். பின்னர் டிக்கெட் இல்லாமல் பஸ், ரயிலில் பயணிப்பது என்று சவால் வலுக்கும்.

பின்னர், தங்கள் கைகளில் கத்தியால் கீறிக் கொள்வது உள்ளிட்ட கொடூரமான செயல்களில் ஈடுபடுமாறு பணிக்கப்படுகின்றனர். அதன் இறுதியில் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது. அதை ஏற்று வெளிநாடுகளில் சுமார் 130 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, நம் நாட்டிலும் 'புளூவேல்' விளையாட்டு சிறுவர்களை ஈர்க்கத் தொடங்கியது. மும்பை, மேற்கு வங்காளம், மணிப்பூர் மற்றும் கேரளாவில் பல மாணவர்கள் இந்த விளையாட்டில் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் மிண்டாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவன் தனது கைகளை கத்தியால் கிழித்து விட்டு, தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவன் தற்போது உடல் நலம் தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்மாணவனிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், சமீபகாலமாக தற்கொலைக்கு தூண்டும் ‘புளூ வேல்’ விளையாட்டு காரணமாக இதை செய்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.