செய்திகள்

பள்ளி விடுதியில் மர்மமான முறையில் இறந்த 10-ம் வகுப்பு மாணவி

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உறவிடப்பள்ளி விடுதியில் மர்மமான முறையில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Odisha

மாலை மலர்

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் மல்கங்கிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அரசு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. செல்வந்தர்களும், சமூகத்தில் முக்கிய அந்தஸ்து பெற்றவர்களும் பயிலும் இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பந்தனா சர்தார் என்ற சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு பள்ளி விடுதியில் இரவு உணவை முடித்து விட்டு அறைக்கு திரும்பிய மாணவர்கள் பந்தனாவை காணவில்லை என்பது குறித்து வார்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விடுதி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணினி அறையில் கை அறுபட்ட நிலையில், சிறுமி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

இதைக் கண்ட விடுதி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கனவே பந்தனா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மீட்கப்பட்ட அறையில் இருந்து கையை அறுக்க பயன்படுத்திய பிளேடு கண்டெடுக்கப்பட்டதால், இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால், தங்களது மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை எனவும், மகளின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை தீர விசாரிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு உறைவிடப்பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Odisha