தர்மபுரி அருகே நல்லம்பள்ளியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 
செய்திகள்

தர்மபுரி அருகே கோஷ்டி மோதல்: மாயமான காதல் ஜோடி போலீசாருக்கு கடிதம்

தர்மபுரி அருகே காதல் விவகாரத்தில் இருதரப்பினருக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் மாயமான காதல் ஜோடி போலீசாருக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளனர்.

மாலை மலர்

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி. இவரது மகன் ராஜ்குமார் (24). வாலிபால் விளையாட்டு வீரர்

அதே பகுதியை சேர்ந்தவர் ஜகதீசன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பிரியங்கா(21). இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 30-ந்தேதி கல்லூரியிலிருந்து ஊருக்கு திரும்புவதாக கூறிவிட்டு வந்த பிரியங்கா வீட்டுக்கு வரவில்லை. அவர் திடீரென மாயமாகி விட்டார்.

இதேபோல் ராஜ்குமாரும் அந்த பகுதியில் இல்லை. அவரும் மாயமாகி விட்டார். இதனால் ராஜ்குமார், தங்களது மகளை கடத்தி சென்று விட்டதாக பிரியங்காவின் பெற்றோர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ராஜ்குமாரை தேடி வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நல்லம்பள்ளியில் இரு தரப்பினரிடையே கடந்த 31-ந்தேதி கைகலப்பு ஏற்பட்டது. இந்த தகராறை தொடர்ந்து ஒரு தரப்பினர் வீசுவதற்காக பெட்ரோல் குண்டுகள் தயாரித்து வீட்டில் வைத்திருந்ததை கண்டறிந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கமலக்கண்ணன் என்பவரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஜ்குமார் தரப்பினரை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், பிரியங்காவின் சகோதரர் விஜய் விஸ்வநாத் (23), அவரது உறவினர்கள் அரவிந்த் (23) மற்றும் செம்புலி என்கிற ரவிக்குமார் (24) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதனால் நல்லம்பள்ளியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 6 டி.எஸ்.பி.க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள், 70-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் தீயணைப்பு வாகனம், வஜ்ரா உள்ளிட்ட கலவர காலங்களில் பயன்படுத்தும் வாகனங்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சமூக விரோத கும்பல்கள் ஊடுருவதை தடுக்க நல்லம்பள்ளியை சுற்றிலும் 31 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் ஊருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.

போலீசார் இன்றுடன் 4-வது நாளாக தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

நல்லம்பள்ளி பகுதியில் பதற்றத்தை தணித்து இயல்பு நிலைக்கு கொண்டு வர வருவாய் துறை மற்றும் காவல் துறை சார்பில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாயமான காதல் ஜோடி தர்மபுரி போலீசாருக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். நாங்கள் விருப்பத்துடனே ஊரை விட்டு வெளியேறியுள்ளோம். எங்களை யாரும் கடத்தவில்லை. எனவே, எங்களது பெற்றோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மேலும் காதல் ஜோடி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மூலம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே ராஜ்குமாரின் பெற்றோருக்கு ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க நல்லம்பள்ளி ஊர் மக்கள் அவரது பெற்றோரை பிடித்து பத்திரமாக போலீசில் ஒப்படைத்துள்ளனர். #tamilnews