30 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. பொதுச் செயலாளராக கட்சியை தன்வசப்படுத்தி வைத்திருந்த அவரது மறைவு எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான அ.தி.மு.க. தொண்டர்களை நிலைகுலைய செய்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
அந்த அளவுக்கு அ.தி.மு.க.வில் கோலோச்சினார். முன்னணி நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அத்தனை பேரும் அவரது கண் அசைவுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருந்தார்கள்.
ஜெயலலிதாவின் எதிரில் நேராக நின்று கூட பேசுவதற்கு தயங்கிய அ.தி.மு.க.வினர் இன்று கட்சிக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி குரல் கொடுத்து வருகிறார்கள். அவரது மறைவு அ.தி.மு.க.வில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. ஜெயலலிதாவுக்கு பின்னர் அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க. பொதுச் செயலாளராகி அவரது பாணியிலேயே அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கினார்.
கட்சிக்கு தலைமை ஏற்ற சசிகலா ஆட்சிக்கும் தலைமை தாங்க ஆசைப்பட்டதால் அ.தி.மு.க.வில் முதல் பிரச்சினை ஏற்பட்டது.
அவருக்கு எதிராக ‘‘ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கினார். இந்த நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை சசிகலாவை பெங்களூர் சிறையில் மொத்தமாக முடக்கிப் போட்டு விட்டது.
இருப்பினும் கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க எண்ணிய சசிகலா, தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினார். தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக்கினார்.
தினகரன் கட்சியையும், எடப்பாடி ஆட்சியையும் வழிநடத்தினர். ஆனால் தினகரனாலும் கட்சி பணியில் நிம்மதியாக நீடிக்க முடியவில்லை. இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுது அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக திடீரென சசிகலாவும், தினகரனும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு சென்ற தினகரன் 38 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் கடந்த 3-ந்தேதி ஜாமீனில் வெளிவந்தார். என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது. கட்சி பணிகளில் தீவிரம் காட்டுவேன் என்று அதிரடியாக அறிவித்தார். இதனை ஏற்க முடியாது என்று அமைச்சர்கள் அறிவித்தனர். இதனால் 2-வது முறையாக அ.தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்டது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். 34 எம்.எல்.ஏ.க்கள் அவரது பக்கம் சாய்ந்தனர். இதனால் அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. தினகரன் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என 2 அணிகளாக அ.தி.மு.க. அம்மா அணி செயல்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மற்றும் ஆதரவாளர்களின் பலம் ஆகியவற்றை ஆயுதமாக்கி மீண்டும் கட்சி பணிகளில் களம் இறங்க தினகரன் திட்டம் தீட்டினார். இதற்காக தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூர் தீட்டிய தினகரன், எடப்பாடிக்கு எதிராக அவர்களை பேசவும் வைத்தார். இதன்படி அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒன்று திரண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். கட்சியை தினகரன் பார்த்துக் கொள்ளட்டும். நீங்களே அவருக்கு அழைப்பு விடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.
தினகரன் தலைமையிலேயே இப்தார் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மதுரையில் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும் தினகரனை பங்கேற்க செய்ய வேண்டும் என்பதையே தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் இந்த விஷயங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியோ, அமைச்சர்களோ வாய் திறக்கவில்லை.
தினகரன் ஆதரவாளர்களின் கோரிக்கையை அவர்கள் கூச்சலாகவே எடுத்துக் கொண்டனர். இப்படி மவுனமாகவே காய் நகர்த்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினகரனை அழைக்காமலேயே இப்தார் நிகழ்ச்சியை நடத்தினார்.
மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான பூமி பூஜைக்கும் தினகரன் அழைக்கப்படவில்லை. பாரதிய ஜனதா சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பது என்கிற அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமியே அறிவித்து விட்டார்.
தினகரனை மீண்டும் கட்சியில் செயல்படுவதற்கு அனுமதித்தால் மட்டுமே அ.தி.மு.க. தலைமை கை காட்டும் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவோம் என்று தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினகரனை எப்படியும் கட்சிப்பணிக்கு கொண்டு வந்து விடவேண்டும் என்பதில் அதி தீவிரமாக செயல்பட்ட தினகரன் ஆதரவாளர்களின் கோஷம் எடப்பாடியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் எடுபடாமலேயே போய் விட்டது. இது தினகரன் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பொதுச் செயலாளரான சசிகலாவின் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்பட்டதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் புதிய பிரச்சினையை எழுப்பி உள்ளனர்.
இதனால் ஜனாதிபதி தேர்தலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன? என்கிற கேள்வியும் பூதாகரமாக எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 100 நாட்களை கடந்துள்ளார். அதற்கும் அவருக்கு சோதனை மேல் சோதனையாகவே வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அவரோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடமையே கண்ணாக செயல்பட்டு வருவதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இருப்பினும் அடுத்தடுத்த நாட்களும் எடப்பாடிக்கு கம்பி மேல் நடப்பது போன்றுதான் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த பரபரப்புக்கு இடையே அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் செய்திகளிலும் குழப்பமான நிலையே காணப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது போல நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் வெளியிடவில்லை. அதற்கு பதிலாக தலைமை கழகம் ஆதரவு என்று செய்தி வெளியாகியுள்ளது.
இன்னொரு பகுதியில் தினகரனை மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் சந்தித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.