செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ஒருவரை கடத்தி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் முர்ரன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த குலசார் அகமது பட் என்பவரை கடத்திச் சென்றனர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை போலீஸ், துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 6 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead