இ-பேப்பர் 
செய்திகள்

செய்தித்தாள் பிடிஎப் நகல்களை வாட்ஸ்அப், டெலிகிராம் குரூப்பில் பகிர்வது சட்டவிரோதம்- ஐஎன்எஸ் எச்சரிக்கை

செய்தித்தாள்களின் பிடிஎப் நகல்களை வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் பரப்புவது சட்டவிரோதம் என்று இந்திய செய்தித்தாள் சங்கம் எச்சரித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் பத்திரிகைத் துறையும் ஒன்று. ஊரடங்கால் செய்தித்தாள் விநியோகம் செய்வது கடும் சவாலாக உள்ளது. இது ஒருபுறமிருக்க, செய்தித்தாள்களின் இ-பேப்பர் பக்கங்களை பிடிஎப் வடிவமாக மாற்றி பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதும் அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து, சந்தா செலுத்தி படிக்கும் இ-பேப்பர் பிடிஎப் பக்கங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் குரூப்களில் பகிர்வது சட்டவிரோதமான செயல் என இந்திய செய்தித்தாள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக செய்தித்தாள் நிறுவனங்களுக்கு இந்திய செய்தித்தாள் சங்கம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு சூழலில் ஒருபுறம் செய்தித்தாள்கள் நிறுவனங்கள் செய்தித்தாள்களை விநியோகம் செய்ய முடியாமல் சவால்களை எதிர்கொள்கின்றன. மறுபுறம் அவற்றின் மின்-காகித நகல் (இ-பேப்பர்) மற்றும் டிஜிட்டல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. 

பல்வேறு பயனர்கள், இ-பேப்பர் பக்கங்களை காப்பி செய்து பிடிஎப் வடிவமாக்கி, அவற்றை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப்களில் பகிர்ந்து பலருக்கும் பரப்புகின்றனர். இதன்மூலம் செய்தித்தாள் நிறுவனங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. 

இதைக் கருத்தில் கொண்டு, ‘செய்தித்தாள்களின் நகல்களை பகிர்வது சட்டவிரோதம், அவர்கள் மீது அபராதத்துடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்தந்த செய்தித்தாள் நிறுவனங்கள் தங்கள் செய்தித்தாள்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகளில் தெரியப்படுத்த வேண்டும். 

மேலும், சட்டவிரோதமாக இ-பேப்பர் பக்கங்களை பகிரும் குரூப் அட்மின்கள் மீது செய்தித்தாள் நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர பிடிஎப் பக்கங்கள் மற்றும் படங்கள் பதிவிறக்கம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக பரப்புகிற தனிநபர்களை கண்காணிக்க கண்ணுக்குத் தெரியாத பயனர் அடையாள குறியீட்டை இணைக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பி.டி.எப்-களை பதிவிறக்கும் பயனர்களை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.