கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளை கடத்திய சம்பவம் தெரிய வந்தது. இங்கு பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் அவர்களுடைய குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டதாக கூறி ஏமாற்றி அந்த குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வது தெரிந்தது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சில ஆஸ்பத்திரிகளை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் சேரும் குழந்தைகளும் இதுபோல் கடத்தப்பட்டு இருந்தன.
இது தொடர்பாக டாக்டர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணியில் மேலும் பலர் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் பாரதீய ஜனதா மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் ஜுகி சவுத்ரிக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், பாரதீய ஜனதா மகளிர் தலைவியும், எம்.பி.யுமான ரூபா கங்குலி, ஜுகி சவுத்ரியை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக ரூபா கங்குலியிடம் இன்று விசாரணை நடத்த சி.ஐ.டி. அதிகாரிகள் அவர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் ஜூகி சவுத்ரியுடனான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
மேலும் இவ்வழக்கில் குழந்தைகள் காப்பகத்தின் அதிகாரி சோனாலி மாண்டல், காப்பகத்தின் தலைவர் சந்தனா சக்கரவர்த்தி மற்றும் அவருடைய சகோதரர் மனாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.