செய்திகள்

பணமதிப்பு நீக்கத்துக்கு பின் வசூலான கருப்பு பணம் எவ்வளவு?: நிதியமைச்சகம் பதில் அளிக்க சி.ஐ.சி. உத்தரவு

பணமதிப்பு நீக்கத்துக்கு பின் வசூலான கருப்பு பணம் எவ்வளவு என பதில் அளிக்குமாறு நிதியமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #BlackMoney #PostDemonetisation

மாலை மலர்

புதுடெல்லி:

பணமதிப்பு நீக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து கலித் முண்டபிள்ளி என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி ஒரு ஆர்.டி.ஐ. மனுவை அனுப்பினார். அதில் பணமதிப்பு நீக்கத்துக்கு வசூலான கருப்பு பணம் எவ்வளவு என கேட்டிருந்தார். ஆனால் இந்த மனுவுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படவில்லை.  

இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்தில்(சி.ஐ.சி.) கலித் கடந்தாண்டு ஜனவரி 9-ம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அவரது மனுவை வருவாய்த்துறைக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியது. ஆனால் ஓராண்டாக அந்த மனுவுக்கு எந்த பதிலும் இல்லை. இது குறித்தும் சி.ஐ.சி.யில் கலித் புகார் செய்தார்.

இதையடுத்து பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனுவுக்கு பதிலளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தில் எந்த தவறான நோக்கமும் இல்லை என பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது. இதனால் அதற்கு சி.ஐ.சி. அபராதம் விதிக்கவில்லை. மேலும் மனுதாரர் கேட்ட விவரங்களை உடனடியாக அளிக்கும்படியும், எதிர்க்காலத்தில் ஆர்.டி.ஐ. விதிகளின்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் வருவாய்த்துறையின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரிக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் சி.ஐ.சி. உத்தரவு பிறப்பித்துள்ளது. #CIC #FinanceMinistry #BlackMoneyCollected #PostDemonetisation #tamilnews