சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக திகழ்வது ‘கேக்’ ஆகும்.
கிறிஸ்து பிறப்பு பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அருகில் வசிக்கும் பிற மத மக்களுக்கு ‘கேக்’ வழங்கி வாழ்த்துகளை கூறுவது வழக்கம்.
கடந்த 2 வருடமாக மூலப்பொருட்கள் விலை உயர்ந்த போதிலும் ‘கேக்’ விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால் இந்த வருடம் பேக்கரி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இது மற்ற உணவு பொருட்களை விட அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. இனிப்பு, காரம் வகைளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்த போதிலும் பேக்கரியில் விற்கப்படும் ‘பண்லி’, ரஸ்க் தவிர மற்ற வகைகளுக்கு 18 சதவீதம் வரி வசூக்கப்படுகிறது.
இதனால் கிறிஸ்துமஸ் கேக் விற்பனையில் ஈடுபட்டுள்ள பேக்கரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு விதவிதமான கேக்குகள் விற்பனை செய்யப்படும் கிரீம் கேக் வகைகள், பிளம் பேக், டீ-கேக் போன்றவை தவிர கிறிஸ்துமஸ்க்காக விசேஷமான பல வகையான கேக்குகள் தயாரிக்கப்படுவது உண்டு.
இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிகளவு பேக்கரி உரிமையாளர்கள் ஈடுபடவில்லை. வழக்கமாக விற்பனையாகும் கேக்குகளை மட்டுமே தயாரிக்கிறார்கள்.
புதிய வரி விதிப்பு கொள்கையால் கேக் வகைகள் ஒரு கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை அதிகரித்துள்ளது. ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்பட்ட பிளாக் பாரஸ்ட் கேக் வகைகள் ரூ.750 முதல் ரூ. 850 வரை விற்கப்படுகிறது.
கிலோ ரூ.400-க்கு விற்கப்பட்ட பிளம்கேக் தற்போது வரியுடன் சேர்த்து ரூ.475 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
டீ கேக் கிலோ 250-ம் வால் நட்சத்திர கேக் ரூ.320-க்கும் விற்கப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இதன் விலை கிலோவிற்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை கடுமையாக பாதிக்கும் என்று பேக்கரி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கேக் பாஸ்ட் உரிமையாளர் பொற்கை பாண்டியன் கூறியதாவது:-
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் விற்பனை கடந்த 2 வருடமாக சரியில்லை. சென்னையில் புயல், வெள்ள பாதிப்புகளால் கேக் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த வருடம் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் பேக்கரி வகைகளுக்கு விதிக்கப்பட்டது. மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் கடினமான சூழலில்தான் கேக் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 24, 25 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் விற்பனை எப்படி இருக்கும் என்று சொல்ல இயலாது.
கேக் தயாரிக்க பயன்படுத்தப்படும் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனாலும் கேக் விலையை நாங்கள் உயர்த்தவில்லை. ஜி.எஸ்.டி. வரி மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து கேக்கிற்கான விலை உயர்வாக இருக்கும் போது வியாபாரம் கட்டாயம் பாதிக்கக்கூடும்.
ஒரு கிலோவிற்கு குறைந்தது ரூ.100 விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த பேக்கரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல், சுவிட், காரம் போன்றவற்றிற்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டது போல பேக்கரி வகைகளுக்கும் குறைத்தால்தான் இத்தொழில் தொடர்ந்து செய்ய முடியும் என்றார்.