செய்திகள்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரொனால்டோ புதிய சாதனை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஒரு சீசனின் அனைத்து குரூப் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது கட்ட குரூப் பிரிவு போட்டிகள் 6-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற எச் பிரிவு லீக் போட்டியில், போரசியா டார்ட்மண்ட் அணியுடன் ரியல் மாட்ரிட் அணி மோதியது. இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் போராடி வென்றது.

ரியல் மாட்ரிட் அணி சார்பில் மேயோரல் (8’), கிறிஸ்டியானோ ரொனால்டோ (12’), வாஸ்குவஸ் (81’) ஆகியோர் கோல் அடித்தனர். போரசியா அணி வீரர் ஆவ்பமியாங் 43-வது மற்றும் 48-வது நிமிடத்தில் தொடர்ந்து இரண்டு கோல்கள் போட்டார். இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலமாக, ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு சீசனின் அனைத்து குரூப் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.