ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர், பாலக்நாத். பாஜகவை சேர்ந்த இவர் ஆன்மிக விழாவில் பங்கேற்பதற்காக இன்று டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோட்காசிம் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் அருகே பாலக்நாத்தை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அப்பகுதியை ஹெலிகாப்டர் நெருங்கியதும் அதில் வந்த எம்.பி.யை நோக்கி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கைகளை அசைத்தனர். அப்போது அங்கு பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது.
ஆனால், கீழே இறங்க முயன்ற ஹெலிகாப்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, நிலைகுலைந்து நான்கைந்து முறை குறுக்கும் நெடுக்குமாக வட்டமடிக்க தொடங்கியது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து அவர்கள் உறைந்துப்போய் நின்றிருந்த நிலையில் ஹெலிகாப்டரை கீழே இறக்கும் முயற்சி கைக்கூடாததை அறிந்த விமானி சமயோசிதமாக டெல்லியை நோக்கி திரும்பிச் சென்றார்.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்காசிம் பகுதிக்கு வந்தார். சற்று தாமதமாக வந்து சேர்ந்தாலும் திட்டமிட்டபடி ஆன்மிக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
விமானியின் சாதுர்யத்தால் தங்களது தொகுதி எம்.பி. மயிரிழையில் உயிர் தப்பியதை எண்ணி பாஜகவினர் நிம்மதி அடைந்தனர்.