கொலை 
செய்திகள்

சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதல்- விவசாயி அடித்துக்கொலை

சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதலில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

மாலை மலர்

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமம் தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் கணேசன் மனைவி வேலுமணி(வயது 50). இவருக்கும் இவருடைய அண்ணன் விவசாயி கோமதுரை(55) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இதில் வேலுமணி, வேலுமணியின் மகன் ராஜீவ்காந்தி, தம்பி பாலச்சந்தர், உறவினர் சந்தியா மற்றும் கோமதுரை, அவருடைய மனைவி சந்தோஷம், பரசுராமன், அம்சவேணி, பத்மா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த கோமதுரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே இருதரப்பினரும் கீழ்குப்பம் போலீசில் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதுரை, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.