முருங்கைக்காய் 
செய்திகள்

சின்னமனூர் பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகம்

சின்னமனூர் பகுதியில் முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான அய்யம் பட்டி, புலிகுத்தி, பல்லவராயன் பட்டி, சிந்தலசேரி உள்ளிட்ட கிராமங்களில் முருங்கை சாகுபடி அதிகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பருவ மழை ஓரளவு கைகொடுத்ததால் முல்லைப் பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் நெல் விவசாயம் மட்டுமின்றி வாழை, தென்னை, கரும்பு, முருங்கை மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டன. தற்போது முருங்கை விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருங்கை காய்கள் செழித்து வளர்ந்து சதை பிடிப்புடன் காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு முருங்கைக்காய்களை அனுப்பி வருகின்றனர். கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை விலை போகின்றன. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் புதிதாக முருங்கை நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து, முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.