செய்திகள்

வடகொரிய விவகாரத்தை வர்த்தக உறவுகளுடன் தொடர்புபடுத்த கூடாது: டிரம்புக்கு சீனா பதில்

வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டல் விவகாரத்துடன் அமெரிக்க- சீன வர்த்தக உறவை தொடர்புபடுத்த கூடாது என டிரம்புக்கு சீனா பதில் அளித்துள்ளது.

மாலை மலர்

பீஜிங்:

அமெரிக்காவின் வர்த்தக பலன்களை பெற்றபோதிலும், வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டல் விவகாரத்தில் சீனா எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி பேசியிருந்தார்.

வடகொரியா நாடும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனையிலும், கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து செல்லும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், டிரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் சீன வர்த்தக துணை மந்திரி கியான் கெமிங் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘வடகொரிய அணு ஆயுத விவகாரம் மற்றும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு ஆகியவை இரு வெவ்வேறு விவகாரங்கள் என நாங்கள் நம்புகின்றோம். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன அல்ல. அந்த இரு விவகாரங்களும் ஒன்றாக விவாதிக்கப்பட கூடாது’’ என வலியுறுத்தினார்.

சீனா-அமெரிக்க வர்த்தக உறவானது பரஸ்பர ஆதாய நோக்கம் கொண்டது. வர்த்தக உறவு, முதலீட்டு ஒத்துழைப்புகளால் சீனாவும் அமெரிக்காவும் பெரிய அளவில் லாபம் ஈட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.