வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜப்பான், சீனா, வியாட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 11 நாட்கள் மாரத்தான் சுற்றுப்பயணம் செய்கிறார்.
டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் ஆசிய நாடுகளுக்கு வருகை தருகிறார். முதலில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு வருகிறார். அங்கிருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தாக்குதல் நடத்திய பேரல் கார்பர் துறைமுகத்தில் உள்ள அரிசோனா நினைவிடத்துக்கு செல்கிறார்.
நாளை (5-ந்தேதி) ஜப்பான் வருகிறார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷன்சோ அபே மற்றும் கோல்ப் வீரர் ஹிடெகி மட்சுயாமாவுடன் கோல்ப் விளையாடுகிறார். பின்னர் அபேயுடன் சந்தித்து பேசுகிறார்.
7-ந்தேதி தென்கொரியா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜயோ இன்னை சந்தித்து பேசுகிறார். தென்கொரிய பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்.
8-ந்தேதி சீனா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஸி ஜின்டாங்கை சந்திக்கிறார். 10-ந்தேதி வியட்நாம் செல்கிறார். அங்கு டனாங்கில் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
11-ந்தேதி வியட்நாமில் உள்ள ஹனோஸ் புறப்பட்டு செல்கிறார். அந்நாட்டு அதிபர் டிரான்டாய் குவாங் மற்றும் தலைவர்களை சந்திக்கிறார்.
12-ந்தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார். அங்கு நடை பெறும் ஆசியா நாடுகள் அமைப்பின் 50-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 13-ந்தேதி மாலையில் நடைபெறும் ஆசியாவின் மாநாட்டில் பங்கேற்கும் அவர் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுயூட்ரேட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்துவதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் ஆசிய நாடுகளில் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற் கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய நாடுகளில் நீண்ட நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் பெறுகிறார். கடந்த 1992-ம் ஆண்டில் சீனியர் புஷ் ஆசிய நாடுகளில் இதுபோன்று பயணம் மேற்கொண்டார். ஜப்பான் சென்ற அவருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.