செய்திகள்

இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா தயாராக உள்ளது: முலாயம் சிங் எச்சரிக்கை

பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா தயார் நிலையில் உள்ளதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் மக்களவையில் கருத்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முழுவதும் எதிர்க்கட்சியினர் எழுப்பிய குற்றச்சாட்டுகளால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இன்று, பாராளுமன்றத்தின் மக்களவையின் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியுமான முலாயம்சிங் யாதவ், “இந்தியாவின் முக்கிய எதிரியான சீனாவிடமிருந்து பல பிரச்சனைகளை நம்நாடு எதிர்நோக்கி வருகிறது. பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்தியாவை தாக்கும் வண்ணம் அணு ஆயுதங்களை சீனா நிறுவியுள்ளது. இந்த தகவல்கள் இந்திய உளவுத்துறைக்கும் தெரியும்” என்றார்.

மேலும் திபெத் பிரச்சனை குறித்து பேசிய அவர் “திபெத்தை சீனாவிடம் ஒப்படைக்கும் விதத்தில் இந்தியா செயல்பட்டு வருகிறது. இது தவறான அணுகுமுறை. திபெத் ஒரு சுதந்திர நாடாகும். சீனாவே நமது முதல் எதிரி, பாகிஸ்தான் அல்ல. சீனாவிடமிருந்து பூடானை காக்க வேண்டியது நமது கடமை. நேபாளத்தையும் கைப்பற்ற சீனா முயற்சித்து வருகிறது” என்றார். இந்திய சந்தைகளில் வலம்வரும் சீன தயாரிப்பு பொருட்கள் குறித்தும் அவர் பேசினார்.