செய்திகள்

அருணாச்சலப் பிரதேசம் எல்லையோரம் திபெத்தில் புதிய அதிவிரைவுச்சாலை: சீனா இன்று திறந்தது

அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரம் திபெத்தில் 409 நீளமுள்ள புதிய அதிவிரைவுச்சாலையை சீன அரசு இன்று வாகனப் போக்குவரத்துக்கு திறந்ததுள்ளது.

பீஜிங்:

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுமார் 3500 கிலோமீட்டர் நீளம்கொண்ட எல்லைப்பகுதி அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அடங்கியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தை தனது அதிகாரத்துக்குட்பட்ட திபெத் நாட்டின் தென்பகுதி என்று சீனா உரிமை கோரி வருகிறது. சீனாவின் புளுகை இந்தியா எதிர்த்தும், நிராகரித்தும் வந்துள்ளது.

இந்நிலையில், திபெத் நாட்டின் லாசா பகுதியை நிய்ங்ச்சி நகருடன் இணைக்கும் 409கிலோமீட்டர் நீளம் கொண்ட அதிவிரைவு நெடுஞ்சாலையை சீனா அமைத்து வந்தது. சுமார் 580 கோடி அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலையை வாகனப் போக்குவரத்துக்கு சீன அரசு இன்று திறந்து வைத்துள்ளது.

நுழைவுக் கட்டணம் இல்லாத இந்த புதிய சாலையின் வழியாக செல்வதன் மூலம் லாசாவுக்கும் நிய்ங்ச்சிக்கும் இடையிலான பயணநேரம் மூன்று மணிநேரம் குறையும் என தெரிகிறது. குறிப்பாக, ராணுவப்படைகளை விரைவாக இப்பகுதிக்கு அனுப்பி வைக்கும் நோக்கத்தில்தான் சீன அரசு இந்த சாலையை அமைத்துள்ளதாக கருதப்படுகிறது.