வேலூர்:
ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் அம்மபாளையத்தை சேர்ந்தவர் பண்டிசுரேஷ். இவர், திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தாட்சாயிணி. அவர்களின் மகள் நந்தினி (வயது 6).
கடந்த 23-ந்தேதி தாட்சாயிணி, நந்தினியை அழைத்துக்கொண்டு திருப்பதிக்கு சென்றார். டீக்கடை எதிரில் நந்தினியை விளையாட விட்டு விட்டு, அவர் கணவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது நந்தினியை திடீரென காணவில்லை. 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடத்திச்செல்வது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்ணின் புகைப்படத்தை வைத்து நந்தினியை கடத்தி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திரா மற்றும் தமிழகத்தில் ஓடும் பஸ்கள், கடைகளில், கடத்தப்பட்ட நந்தினி மற்றும் கடத்திச் சென்ற பெண்ணின் புகைப்படத்தைத் ஒட்டி உள்ளனர்.
மேலும் நந்தினியை கடத்திச் சென்ற பெண் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்துக்கு போகும் பஸ்சில் ஏறி சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதுபற்றி திருமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் துளசிராம் மற்றும் 5 போலீசார் கொண்ட தனிப்படை வேலூரில் முகாமிட்டு வேலூர் போலீசாரின் உதவியோடு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.