ஓமலூர்:
ஓமலூர் அருகே உள்ள பெரிய ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (31). நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சுமித்ரா (26) என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பெற்ற பிறகு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு லெனினா ஸ்ரீ என்று பெயர் சூட்டி பாசமாக வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் அவரது வீட்டை ஒட்டி சின்னு என்பவர் 20 செண்ட் நிலத்தில் பசு மாட்டுக்கான தீவனப்புல் பயிரிட்டு வளர்த்து வந்தார். தீவனப்புல்லை சேதப்படுத்தும் கோழிகளை கொல்வதற்காக குருணை மருந்தை வீட்டருகே உள்ள தோட்டத்தில் அவர் வைத்து சென்றார்.
அப்போது லெனினா ஸ்ரீயை அவரது பெற்றோர் அந்த பகுதியில் எடுத்து சென்ற போது விஷ நெடி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அந்த குழந்தை இறந்தது.
மேலும் வெங்கடேசன் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் நவீன்குமார் என்பவரின் மகன்கள் கிரிஸ் (3) வர்சன் (1) ஆகிய 2 குழந்தைகளுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான லெனினா ஸ்ரீயின் தந்தை வெங்கடேசன், தனது குழந்தையை விஷம் வைத்து சின்னு என்பவர் கொன்று விட்டதாக தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இறந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அதற்கு தகுந்தார் போல அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். விஷம் தெளித்த சின்னு தலைமறைவாகி விட்டார். அவரையும் தீவட்டிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews