செய்திகள்

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறக்கப்படும்: முதல்வர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முக்கியமான மூன்று அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில்  இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வேளாண் பெருமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களது வேண்டுகோளை ஏற்று 5.10.2017 முதல் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருயது சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்தும் பாசனத்துக்காக அக்.5-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 747 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.