மன்னார்குடி:
அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டத்தில் புழுதுகுடி, சோழங்கநல்லூர், மாங்குடி, ராயநல்லூர், பள்ளங்கோவில், ஈஞ்சல் பகுதிகளில் பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நேரடி விதைப்பு, நடவு பயிர்கள் முழுமையாக மழைநீரால் சூழப்பட்டு அழுகி விட்டது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் நீரால் சூழப்பட்டு அழுகத் தொடங்கி விட்டது. அமைச்சர் காமராஜ் 30,000-ம் ஏக்கரில் பாதிப்பு என்றும், அமைச்சர் ஓ.எஸ். மணியன் 1 லட்சம் ஏக்கரில் பாதிப்பு என்றும் கூறுகிறார்கள். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பாதிப்பே இல்லை என்று மறுக்கிறார். அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா மாவட்டங்களை பார்வையிட மறுக்கிறார். பயிர் காப்பீடு செய்ய, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் பிரீமியம் பெற மறுக்கிறார்கள். விவசாயிகள் பெயரில் கடன் தொகை பெற்று சேமிப்பு கணக்கில் வரவு வைத்து மோசடியில் ஈடுபடுகிறார்கள். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் செய்வதறியாது பரிதவிக்கிறார்கள்.
தமிழக முதல்வர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டாவை பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.25,000-மும், விவசாயத் தொழிலாளி குடும்பத்துக்கு மாதம் ரூ.5,000-மும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாற அவர் கூறினார்.