சென்னை:
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை போற்றும் விதமாக செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று அவரது மகள்வழிப் பேரன் கேசவ் தேசிராஜூ காலமானார்.
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலாளரான கேசவ் தேசிராஜூ இதய கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. இவரது இறுதி சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.
கேசவ் தேசிராஜூவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் கேஷவ் தேசிராஜூ இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அவர், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.
மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார். தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.