முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

வெங்கையா நாயுடு, தமிழகம் மீது தொடர்ந்து அன்பு வைத்துள்ளார் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழகம் மீது தொடர்ந்து அன்பு வைத்துள்ளார் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நமது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காண்பதற்கு எளியவராகவும், கடுஞ்சொல் பேசாதவராகவும் விளங்கும் அரசர் ஆளும் நாட்டை உலகம் புகழும் என்ற வள்ளுவர் பெருந்தகை அவர்களின் கூற்றுப்படி எல்லோரும் எளிதில் அணுகும்படியான எளியவராகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும், பெண்களையும் கவர்ந்து இழுக்கக் கூடிய வரும், எல்லோரும் விரும்பும்படியாக இனிமையாக பேசிப்பழகக் கூடியவராகவும், பாரத மக்களுக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

”உழைப்பே உயர்வு” என்ற பழமொழிக்கு இவர் வாழ்வே ஓர் உதாரணமாகும்.

வெங்கையா நாயுடு தமிழ்நாட்டின் உற்ற நண்பர் என்று நமது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கூறுவார்கள். அதே உறவும், அன்பும் இன்றளவும் நம் மீது வைத்திருப்பவர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

மேலும், இவர் மத்திய நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது, என்னுடன் இணைந்து திருமங்கலம் முதல் நேரு பார்க் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை 14.5.2017 அன்று தொடங்கி வைத்த நிகழ்வு எனது மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.

மேலும், அன்றே தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய திட்டங்களை பற்றி ஆய்வு செய்து, நமது மாநில திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு ஒரு பாலமாக செயல்பட்டவர்.

அம்மாவிற்கு பிறகும், அம்மாவின் அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இன்றும் மத்திய அரசிலிருந்து உரிய ஆணையை பெறுவதற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார்.

”போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு பேண வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன் மொழிகளின் அடிப்படையில் இன்றும் மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

குடியரசு துணைத்தலைவர் என்று சொன்னால் அது மிகையாகாது. பல ஆண்டுகளாக மாநிலங்கள் அவையில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம், அனைத்து கட்சியினரிடம் நண்பராக பழகும் இவரது இயல்பான குணம், ஆகியவை தான்.

வெங்கையா நாயுடுகாரு அவர்களை இன்று பாரதத்தின் குடியரசு துணைத் தலைவராக உயர்த்தி இருக்கிறது. அரசுப் பதவியைவிட மக்கள் பணி என்பதுதான் முக்கியம் என்ற கொள்கை பிடிப்பு கொண்டவர்.

ஏற்றுக்கொண்ட பதவிகளில் அனுபவங்கயையும், அறிவையும், அர்ப்பணிப்பையும் கொண்டு திறமையாக பணியாற்றி, அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவர்.

இவர், தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தனது உரையின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் தமிழில் உரையாடுவார். சமீபத்தில் சென்னையில் மாணவர்களிடையே பேசுகையில் தாய்மொழி கண் போன்றது என்றும், தாய்நாடு, தாய்மொழி மற்றும் பிறந்த ஊரை என்றென்றும் மறக்கக் கூடாது என்றும் ஒரு உயரிய அறிவுரையை கூறினார்.

வீட்டிலும், வெளியிலும் நமது தாய்மொழியில் தான் பேச வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய இவர், தமிழும், தமிழ்நாடும் தன் மனதிற்கு நெருக்கமானவை”” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீது இவர் வைத்துள்ள ஈடுபாட்டையும், அன்பையும், பாசத்தையும் காட்டுவதாக இந்த நிகழ்வுகள் உள்ளன.

இன்று வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இவரது அனுபவங்கள், அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அரசியலிலும், பொது வாழ்க்கையிலும் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாகவும், கிரியா ஊக்கியாகவும் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.