செய்திகள்

பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்

பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், சீனிவாசபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், எல்.கே.ஜி. படித்து வந்த, ஆலந்தூர் வட்டம், சீனிவாசபுரம், பெரிய கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கீரத்திஸ்வரன், 2.3.2018 அன்று பள்ளியிலுள்ள கழிவறைக்குச் செல்லும்போது, திறந்து வைக்கப்பட்ட கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தான் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வன் கீரத்திஸ்வரன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலுள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்படவும், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும், கல்லூரிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.


இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வன் கீரத்திஸ்வரன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.