செய்திகள்

அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் அறிவிப்பு

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, தனக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கலும் வேதனையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தற்கொலை செய்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அனிதா இன்று (1.9.2017) தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வி அனிதா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவ கண்மணிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அரசு செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.