சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் சதீஷ் பீல்டிங் தேர்வு செய்தார். மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள்.
ஷிஜித் சந்திரன் சிக்சராக விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். இருவரும் அரைசதம் அடித்தனர். 12 ஓவரில் மதுரை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்திருந்தது. இருவரின் ஆட்டத்தை பார்க்கையில் ஒரு கட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி 200 ரன்னைத் தாண்டும் சூழ்நிலை இருந்தது.
அந்தவேளையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் சதீஷ் 13-வது ஓவரை வீசினார். இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. முதல் பந்தில் அருண் கார்த்திக்கும், 2-வது பந்தில் ஷிஜித் சந்திரனும் ஆட்டம் இழந்தனர்.
அருண் கார்த்திக் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ருடன் 55 ரன்களும், ஷிஜித் சந்திரன் 37 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 61 ரன்களும் சேர்த்தனர். இதே ஓவரின் கடைசி பந்தில் ஷாருக்கா கான் ரன்அவுட் ஆனார். இந்த ஓவரில் 2 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியது.
அதன்பின் மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியின் ரன்விகிதம் மளமளவென குறைந்தது. சுரேஷ் குமார் 16 ரன்னிலும், பிரான்சிஸ் ரோகின்ஸ் 13 ரன்னிலும், விக்னேஷ் 5 ரன்னிலும், கார்த்திகேயன் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. மதுரை அணி கடைசி 7 ஓவரில் 47 ரன்கள் மட்டுமே எடுத்தது.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எச். கோபிநாத் மற்றும் தலைவன் சர்குணம் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். எச். கோபிநாத் 12 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 23 ரன்களை விளாசி முருகானந்தம் பந்தில் அவுட் ஆனார்.
இவருடன் களமிறங்கிய தலைவன் சர்குணம் 30 பந்துகளில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர்களுடன் 41 ரன்களை குவித்தார். இந்நிலையில், கார்திகேயன் வீசிய பந்தில் சர்குணம் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சரவணன் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய சசிதேவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய அந்தோனி தாஸ் 16 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சதீஷ் மற்றும் சசிதேவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
சசிதேவ் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 30 ரன்களை எடுத்தார். மற்றொரு வீரரான சதீஷ் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது.