வீடியோ வெளியிட்ட பெண் 
செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறிய பெண் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் தனக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை என புகார் கூறிய பெண் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த ரஜினி பிரியா என்ற பெண், சமூக வலைத்தளம் வாயிலாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்த விவரம்:

என்னுடைய பெயர் ரஜினி பிரியா, சென்னை மாநகராட்சியால் பிரிக்கப்பட்டுள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூருக்கு உட்பட்ட பாடியில் வசித்து வருகிறேன். தற்போது மிரட்டி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளேன். கடந்த 4 நாட்களாக சளி, தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு என்னிடமிருந்த தற்பாதுகாப்பு மாத்திரைகளை பயன்படுத்தி பலன்அளிக்காததால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது சோதனை முடிவு ஐசிசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றிற்கும் செல்லும் என்று தனியார் மருத்துவமனையில் கூறினார்கள்.

நேற்று எனக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தது. வாட்ஸ் அப்பிலும் தகவல் வந்தது. இதனால் மாநகராட்சி அல்லது அரசிடம் இருந்து என்னை தொடர்பு கொண்டு மருந்து அளிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இரு இடத்திலும் இருந்து எந்த தகவலும் வரவில்லை, இன்று காலை வரை யாரும் வரவுமில்லை. மெடிக்கலில் மருந்து கேட்டால் அரசு வழிகாட்டுதல்படி மருந்து தர இயலாது என்கிறார்கள். எங்கள் பகுதிக்கு தினமும் வந்து விசாரிக்கும் நபர்களிடம் இதுகுறித்து கூறினேன். 

ஆனால் அவர்கள் எனது கணவர் மற்றும் மாமியார் அழைத்துச் சென்றனர். மதியம் 3 மணி வரை அவர்கள் திரும்பி வரவில்லை, எனக்கு சாப்பாடு வழங்க கூட யாருமில்லை. எனக்கு மிகுந்த தலைவலியாக உள்ளதால் என்னால் தாங்க முடியவில்லை. வீட்டில் இருக்கும் எனக்கு இந்த நிலைமை என்றால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் என்ன நிலைமை என்று தெரிந்துவிட்டது. 

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறவில்லை, குறைந்தபட்சம் மெடிக்கலில் மருந்து வழங்க  சொல்லுங்கள். மாநகராட்சியின் இதுபோன்ற செயலால்தான் சென்னையில் கொரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இது யார் செய்த குளறுபடி என்று தெரியவில்லை. 

என்னால் முடியாததால் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன். முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லும்வரை இந்த வீடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த பெண் கூறியிருந்தார்.

இதுபற்றி மாநகராட்சி அலுவலர்களின் கவனத்திற்கு சென்றதும், அந்த பெண் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பரிசோதனையின்போது அப்பெண் கொடுத்த முகவரியில் திருவள்ளூர் மாவட்டம் என குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாக சென்னை மாவட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அவர் மாநகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்களை மாநகராட்சி கையாண்டுள்ளது. இதுவரை இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதில்லை. பரிசோதனையின்போது பொதுமக்கள் சரியான முகவரியை தெரிவித்தால் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அப்பெண், தனக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதாக கூறி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.