சென்னையில் பேரிடர் நிகழும் போதெல்லாம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து செய்யும் உதவிகள் பாராட்டும் வகையில் இருக்கும்.
தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அ கற்றும் பணிகளிலும் சென்னை மாநகர போலீசார் களம் இறங்கி உள்ளனர்.
நேற்று மாலை 6 மணிக்கு சென்னையில் பலத்த மழை தொடங்கியதும் பல இடங்களில் சாலைகளில் மழைத் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது.
வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்தது.
போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் கடுமையாக போராட வேண்டியதிருந்தது. நள்ளிரவு 2 மணி வரை போக்குவரத்தை சரி செய்யும் பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
அதன் பிறகு தங்கள் வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் தான் தூங்கி ஓய்வு எடுத்தனர். இன்று அதிகாலை 6 மணிக்கு மீண்டும் பணிக்கு வந்து விட்டனர்.
தொடர் மழை காரணமாக இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் இன்றும் கடும் சவாலை எதிர்கொண்டனர்.
இதற்கிடையே போலீசாரும் வெள்ள நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மக்களை உஷாராக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள்.
முக்கியப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில், “போலீசாரின் பணிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.