சென்னை:
சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
பின்னர் குறுஞ்செய்தியை அனுப்பிய நபர் சிறுமியின் ஆபாச மார்பிங் புகைப்படத்தை அவருக்கே அனுப்பி வைத்தார்.
பின்னர் இன்ஸ்ட்டாகிராமில் ஆபாசமாக சாட் செய்து பேசுமாறு மாணவியை அந்த நபர் அழைத்துள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையிலும் தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பின்னர் மாணவியின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பரப்பி உள்ளார். இதுபற்றி சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்ட்கிராம் பக்கத்தின் தொடர்புகள் பற்றி விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு ஆபாச தொல்லை கொடுத்தது கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 17 வயது சிறுவன் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டான். மாணவியின் இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் இருந்த போட்டோவை காப்பி செய்து பின்னர் அந்த படத்தை சிறுவன் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.