செய்திகள்

சென்னை ஸ்மாசர்ஸ் சீருடை அறிமுக விழா: லுங்கி டான்சில் அசத்திய பி.வி.சிந்து

சென்னை ஸ்மாசர்ஸ் பேட்மிண்டன் அணி வீரர்களுக்கான சீருடை அறிமுக விழாவில் லுங்கி டான்ஸ் பாடலுக்கு பி.வி.சிந்து நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

மாலை மலர்

சென்னை:

பிரிமியர் பேட்மின்டன் லீக்கின் 3-வது தொடர் நாளை (23-ம் தேதி) தொடங்கி ஜனவரி 14ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில், விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் சீருடை அறிமுகப்படுத்தும் விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 

தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் உரிமையாளருமான விஜய பிரபாகர், அணியில் இடம்பெற்றுள்ள பி.வி.சிந்து, கிரிஸ் அட்காக், கேபி அட்காக் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் கலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பி.வி. சிந்து லுங்கி டான்ஸ் பாடலுக்கு ​​விஜய பிரபாக​ருடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

விழாவில் பேசிய பி.வி.சிந்து ‘எனது ஆட்டமுறை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு சென்னை அணியை மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு போட்டிகளுக்காக சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த வருடத்தினைப்போல் இந்த ஆண்டும் கோப்பையை வெல்வோம்’ என்று கூறினார்.​ 

அணி உரிமையாளர் விஜயபிரபாகரன் பேசும்போது, ‘எந்த ஒரு விளையாட்டிலும் சென்னை அணியின் விளையாடுபவர்கள் உலக அளவில் மிளிர்கிறார்கள். எங்கள் அணியில் ஆரம்பம் முதல் விளையாடி வரும் சிந்து உலக அளவில் ஜொலிப்பது மகிழ்ச்சியானது. எங்கள் அணியை மென்மேலும் புகழ்பெறச் செய்ய வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் அணியில் உலகின் மிகச்சிறந்த வீரர்கள் பங்கு பெறுவார்கள். மேலும் தமிழ்நாட்டிலிருந்தும் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை எங்கள் அணியில் விளையாட வைப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை நினைவுபடுத்தும் வகையில் தான் எங்கள் அணிக்கு மஞ்சள் உடைகளும் சிங்க லோகோவையும் வைத்திருக்கிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல் எங்கள் அணியும் புகழ் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சென்னையில் எங்களால் விளையாட முடியாமல் போனது. இந்த முறை சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சி. இந்த ஆண்டும் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம்’ என்றார்.

சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 2வது சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.