செய்திகள்

கட்டிடத்தை இடிக்கும்போது சென்னை சில்க்சில் இன்று மீண்டும் தீ

தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது மீண்டும் தீ பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31-ந்தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

7 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது. கடந்த 2 நாட்களாக போராடி தீயணைத்தனர். ரூ.100 கோடிக்கு பொருட் சேதம் ஏற்பட்டது.

இதையொட்டி அரசு சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் உள்பட நவீன எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

இதையொட்டி கடந்த 4 நாட்களாக உஸ்மான் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அருகில் உள்ள வீடுகளில் வசித்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில இன்று கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இன்று காலையில் திடீரென கட்டிட இடிபாடுகளை அகற்றும் போது திடீரென மீண்டும் தீ பிடித்தது.

கட்டிட இடிபாடுகளின் உள்ளே கிடந்த பொருட்கள், துணிகள் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் பல லாரிகளில் கொண்டு வந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதை தொடர்ந்து கட்டிட இடிபாடுகள் அகற்றும் பணி, கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. கட்டிடத்தை மும்முரமாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.