கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சென்னை மாநகர போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
பணியில் இருக்கும் போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகரில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அனைத்து போலீசாரும் கொரோனா பாதுகாப்பு அறிவுரைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மீண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் 9 அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
* அனைத்து போலீசாரும் கட்டாயம் முகக்கவசம், கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* வாகன தணிக்கையின்போது கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
* போலீஸ் வாகனங்கள், காவல் நிலைய மேஜை, நாற்காலி ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* போலீஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பதுடன் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இது பற்றிய கால அட்டவணையையும் பராமரித்து கடைப்பிடிக்க வேண்டும்.
* போலீசார் அனைவரும் சுகாதாரமான வீட்டு உணவுகளையே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அந்தந்த போலீஸ் சரகத்திலேயே உணவுகளை சமைக்க வேண்டும்.
* 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* போலீசாருக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதில் சுகாதாரத் துறையினர் முன்னுரிமை அளிக்க வேண்டும்.