செய்திகள்

இன்று முதல் நடைபெறுவதாக இருந்த ஒரிஜினல் லைசென்ஸ் சோதனை 4 நாட்கள் நிறுத்தம்

சென்னையில் இன்று முதல் நடைபெறுவதாக இருந்த ஒரிஜினல் லைசென்ஸ் சோதனை 4 நாட்கள் நடத்த வேண்டாம் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் போலீசாரை வலியுறுத்தியுள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் வாகன ஓட்டிகள் இன்று முதல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல் உள்ளிட்ட 6 போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் காட்ட வேண்டும் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இன்று முதல் 4 நாட்களுக்கு இந்த சோதனையை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். வருகிற சனிக்கிழமை வரையில் சோதனை நடத்த வேண்டாம் என்றும், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் போலீசாரை வலியுறுத்தினர்.

இதன்படி இன்று விதி மீறல்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டவில்லை. போக்குவரத்து கூடுதல் ஆணையர் பெரியய்யா மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.