செய்திகள்

சென்னையில் நவம்பர் 20-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில சுயாட்சி மாநாடு

சென்னையில் நவம்பர் 20-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

ம.தி.மு.க. மாவட்ட செய லாளர்கள், உயர் நிலைக்குழு ஆட்சி மன்ற குழு, அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை நிலையமான தாயகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு-

* திராவிட இயக்கத்தின் 101-வது ஆண்டு தொடக்க நாளான நவம்பர் 20-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது என்றும் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் மாநில கட்சி தலைவர்களை அழைப்பது. மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 8-வது அட்ட வணையில் இடம் பேற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க செயல் திட்டம் வகுப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

* இலங்கை தமிழர்களுக்கு விடியல் கிடைக்க தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றி பெரும் வரலாற்று கடமை மேற்கொண்ட கழக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இக்கூட்டம் பாராட்டுக்கையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

* ஐ.நா. மன்றத்தில் ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் வகையில் கழக பொதுச் செயலாளர் வைகோவை தாக்குவதந்கு கைக்கூலிகளை ஏவி விட்ட சிங்கள அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

* இந்திய நாட்டின் குடிமகனும், 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவருமான தமிழ் தேசிய இன தலைவர் வைகோவை தாக்க முயன்ற சிங்கள அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்காதது வருத்த மளிக்கிறது. இனியாவது மத்திய பா.ஜனதா அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

* வைகோ மீது தாக்குதல் நடத்த சிங்கள முன்னாள் ராணுவத்தினரை ஏவி விட்ட இலங்கை அரசை கண்டித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.