செய்திகள்

செயல்படாத விசாரணைக் கமிஷனுக்கு இவ்வளவு செலவா? - சென்னை ஐகோர்ட் கேள்வி

ரகுபதி ஆணையத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், செயல்படாத விசாரணைக் கமிஷனுக்கு கோடிக்கணக்கில் வீண் செலவு செய்வதா? என கேள்வி எழுப்பி உள்ளது. #RagupathiCommission #ChennaiHighCourt #InquiryCommission

மாலை மலர்

தி.மு.க. ஆட்சியின்போது புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்திற்கு செய்யப்பட்ட செலவு எவ்வளவு, இதுவரை எவ்வளவு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் இதுவரை 5 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இளவரசன் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு ஆணையம், ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், தலைமை செயலக முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி ஆணையம் என 5 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிங்காரவேலு ஆணையத்திற்கு இதுவரை 2 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், ராஜேஷ்வரன் ஆணையத்திற்கு 1 கோடியே 47 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 32 லட்சம் ரூபாய், அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 27 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

ரகுபதி ஆணையத்தை பொறுத்தவரை இதுவரை 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தடை விதித்திருந்த மூன்றாண்டு காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.