சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றியவர் தனஞ்செயன். இவர், கடந்த 1993-ம் ஆண்டு பணியில் இருந்தபோது உயர் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பஸ்சில் இருந்த சில ‘லக்கேஜ்களுக்கு’ டிக்கெட் கொடுக்கவில்லை என்றும், வசூல் தொகையில் 30 காசு குறைவாக இருந்ததாகவும் தனஞ்செயன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனடிப்படையில் விசாரணை நடத்தி, அவரை கடந்த 1995-ம் ஆண்டு பணிநீக்கம் செய்து போக்குவரத்துக் கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, சாதகமான உத்தரவை தனஞ்செயன் பெற்றார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் போக்குவரத்துக் கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்துக் கழக நிலையாணைப்படி ரூ.20 வரை குறைவாக இருந்தால், அதை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, 30 காசு குறைவாக இருக்கிறது என்று கூறி தனஞ்செயனுக்கு தண்டனை வழங்கியது நியாயமற்றது என்று தொழிலாளர் நலத்தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பாயம் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் எந்த விதிமீறலும் இல்லை. 30 காசு குறைவாக இருந்தது என்ற காரணத்தை கூறி தனஞ்செயனை பணி நீக்கம் செய்ததை ஏற்க முடியாது. போக்குவரத்துக் கழகம் தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். #tamilnews