விக்கிரமசிங்கபுரம்:
சென்னை கிண்டி நரசிங்கபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் பரசு ராமன். அவருடைய மகன் தினேஷ் (வயது 19). ஊட்டியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.டெக். படித்து வந்த தினேஷ், விடுமுறையை கொண்டாடுவதற்காக தன்னுடன் படிக்கும் தென்காசியை சேர்ந்த முகம்மது ராய்ஸ் வீட்டுக்கு நண்பர்களுடன் சென்றார்.
பின்னர் அவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் நேற்று பாபநாசம் தலையணைக்கு குளிக்க சென்றனர். அங்கு ஆபத்தான பகுதியில் தினேஷ் குளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே அவரது நண்பர்கள் தினேஷை மீட்க முயன்றனர்.
ஆனால் முடியாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் இறங்கி தேடினர். ஆனால் அதற்குள் தினேஷ் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.