செய்திகள்

அணையில் குளித்தபோது புதை மணலில் சிக்கி சென்னை தம்பதி பலி

சிற்றாறு அணையில் குளித்த போது புதை மணலில் சிக்கி சென்னை தம்பதி பாலமுருகன், விமல் தங்கம் பலியாகினர்.

நாகர்கோவில்:

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 49).

ரெயில் பெட்டி தொழிற்சாலையில் என்ஜினீயரிங் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி விமல் தங்கம் (43). மெட்ரிக் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஆகாஷ், கனிஷ் என்ற மகன்கள் உள்ளனர்.

பாலமுருகன், மனைவி மற்றும் மகன் கனிசுடன் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று காலை சிற்றாறு-2 அணை பகுதிக்கு பாலமுருகன், விமல்தங்கம், கனிஷ், பழனிபிரேம், அவரது மனைவி மீனாம்பிகா ஆகிய 5 பேரும் சென்றனர்.

சிற்றாறு அணையில் குளித்த போது பாலமுருகன், விமல்தங்கம், மீனாம்பிகா ஆகியோர் சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த கனிஷ், பழனி பிரேம் இருவரும் கூச்சலிட்டனர். அங்கிருந்த பணியாளர்கள் ஓடி வந்து மீனாம்பிகா, விமல்தங்கத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் விமல்தங்கம் பரிதாபமாக இறந்தார். பால முருகனை தேடும் பணி நடந்தது.

1 மணி நேரத்திற்கு பிறகு பாலமுருகன் பிணமாக மீட்கப்பட்டார். பாலமுருகன், விமல் தங்கத்தின் உடலை பார்த்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

மீனாம்பிகா கரையோர பகுதியில் உள்ள புதை மணலில் சிக்கியதால் உயிர் தப்பி உள்ளார்.

SCROLL FOR NEXT