துப்பாக்கி சூட்டில் இறந்த ஆதித்யகுமார், தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட படம். 
செய்திகள்

உ.பி.யில் புதுமண தம்பதி மீது துப்பாக்கி சூடு: சென்னை என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சென்னை புதுமண தம்பதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் சென்னை என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பூந்தமல்லி:

ஐதராபாத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ஆதித்யகுமார் (வயது 31). என்ஜினீயரிங் படித்து உள்ளார். சென்னை ராமாபுரம், ஆனந்தம் நகர், 4-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கர்நாடக மாநிலம், குல்பர்கா பகுதியை சேர்ந்த விஜயலட்சுமியை (28) காதலித்து வந்தார்.

பின்னர் இரு வீட்டாரின் சம்மத்தத்தோடு மே மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தன் அத்தை வீட்டுக்கு திருமண விருந்துக்காக ஆதித்யகுமார், மனைவி விஜயலட்சுமி மற்றும் நண்பர் ஷியாம்தேஜாவுடன் சென்றார்.

இந்நிலையில் 17-ந் தேதி மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புதுமண தம்பதியான இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், நண்பர் ஷியாம்தேஜா மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்கு வந்தனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மர்ம நபர்கள் ஆதித்யகுமாரை துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது துப்பாக்கி தோட்டா ஆதித்யகுமார் அணிந்து இருந்த ஹெல்மெட்டின் பக்கவாட்டை துளைத்து அவரது தாடையை கிழித்துக்கொண்டு வாய் வழியாக வெளியேறியது. இதில் நிலைகுலைந்த ஆதித்யகுமார், மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் விஜயலட்சுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷியாம்தேஜா, இருவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மீரட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆதித்யகுமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம்தேஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? எதற்காக சுட்டனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.

SCROLL FOR NEXT