செய்திகள்

உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய சென்னை தம்பதி கைது

உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய சென்னையை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

மும்பை:

மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஒரு தம்பதி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பெண்ணின் உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் தங்க கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், தங்க கடத்தலில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சிவாதேவி என்பது தெரியவந்தது. பாலசுப்பிரமணியம் தனது வீட்டை ரூ.65 லட்சத்திற்கு விற்பனை செய்து அந்த பணத்தை வைத்து வெளிநாடுகளுக்கு சென்று, குறைந்த விலைக்கு தங்கத்தை வாங்கி இந்தியாவுக்கு கடத்தி வந்து விற்று லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

பாலசுப்பிரமணியத்திற்கு 2 மனைவிகள். அவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க 2 மனைவிகளையும் மாற்றி மாற்றி தங்க கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கு முன் அவர் 2 முறை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews

SCROLL FOR NEXT