சென்னை:
சென்னையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 41-வது புத்தகக் கண்காட்சி நாளை (புதன்கிழமை) அமைந்தகரை ஜெயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) தொடங்குகிறது.
நாளை மாலை 5 மணிக்கு புத்தகக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற உள்ளது. பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்று பேசுகிறார். பபாசி புரவலர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்குகிறார்.
அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் கலந்துகொண்டு புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கிறார். 22-ந்தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. தினமும் பிரபலங்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
புத்தகக் காட்சியை தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பார்க்கலாம். விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும்.
புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்களை அந்த காட்சியில் காணலாம்.
சென்னை புத்தகக் காட்சியில் இந்த தடவை 700க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. வாகனங்களை நிறுத்துவதற்கும் சிறப்பு இட வசதி செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் வருபவர்கள் உணவகம் செல்லவும் மற்றும் ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சியை முன்னிட்டு 11-ந்தேதி அந்த பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார்.
தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் கோ.விஜய ராகவன் வாழ்த்துரை வழங்குகிறார்.